LOADING

Type to search

இந்திய அரசியல்

குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் அனாதையாக கிடந்த குழந்தையை தத்தெடுக்க போட்டா போட்டி

Share

நாகர்கோவில்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய்மொழியில் உள்ள பெருமாள் கோவில் அருகே 17 ம் தேதி மதியம் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்டுக் கிடந்தது. தொப்புள் கொடியில் நூல் சுற்றப்பட்ட நிலையில் ரத்தக்கரையுடன் குழந்தை கிடந்ததை பார்த்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் குழந்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவியில் உள்ளது.

குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். குழந்தையின் தாயார் யார் என்பதை கண்டுபிடிக்கும் வகையில் ஆரல்வாய்மொழி போலீசார், சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும்படியான இரு வாலிபர்கள் அந்த பகுதியில் நடமாடி உள்ளனர். பெண் ஒருவரும் வந்து சென்றுள்ளார். ஆனால், இவர்கள் குழந்தையை கொண்டு வந்ததற்கான அடையாளங்கள் இல்லை.

இருப்பினும் இவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாவாட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.இவர்கள் செங்கல் சூளைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு பணியாற்ற வந்த இடத்தில் இளம்பெண் குழந்தை பெற்று அதை கோவிலில் வைத்து விட்டு சென்றிருக்கலாமா என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

பச்சிளங்குழந்தை விவகாரம் என்பதால் குழந்தைகள் நல அதிகாரிகள், சமூக நலத்துறையினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே குழந்தையை தத்தெடுக்க கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலரும் காவல்துறை மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவ்வாறு நேரடியாக குழந்தையை ஒப்படைக்க முடியாது.

குழந்தை நலமானவுடன், நெல்லையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு சரணாலயத்தில் தான் ஒப்படைக்கப்படும். அங்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குழந்தை வழங்கப்படலாம். தாய் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால் அவரது விருப்பப்படியே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.