பாட்னாவில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு இல்லை – காங்கிரஸ் மீது மயாவதி கடும் தாக்கு
Share
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தனது குடும்ப நிகழ்வு காரணமாக கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் கூட்டத்தில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார். இக்கூட்டத்தை தவிர்க்கும் வகையில் மாயாவதி சில பதிவுகளை செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அவர் தெரிவித்திருப்பதாவது: பாட்னா கூட்டமானது, தலைவர்களின் கைகளை கோர்ப்பதை போன்றுதான் தெரிகிறதே தவிர, இதயங்களை இணைப்பது போல இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வன்முறை போன்றவற்றால் நாடு அல்லல்படும்போது அம்பேத்கர் கட்டமைத்து கொடுத்த அரசியல் சாசனம் மூலம் சமத்துவ சமுதாயம் உருவாக்க காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. போன்ற கட்சிகளால் முடியாது.
இதுபோன்ற கூட்டத்தை கூட்டும் முன்பாக, “பேசுவது ஒன்றும், நோக்கம் வேறாகவும்” உள்ள இப்படிப்பட்ட கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விடுவது நல்லது. மேலும், எந்த கூட்டணிக்கும் வெற்றி தேடித் தர அவசியமான, இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையாக 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தின் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அவசியமான விஷயங்களுக்கு முன்னுரிமை தராமல் மேற்கொள்ளப்படும் மக்களவை தேர்தல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் எவ்வாறு பயனளிக்கும்? இவ்வாறு மாயாவதி தெரிவித்திருக்கிறார்.













