‘பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு சிறந்த தொடக்கம்’ திரிணமூல் காங்கிரஸ் கருத்து
Share
பாட்னாவில் ஜூன் 23 (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான நல்ல தொடக்கமாக திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. மேலும் ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார கொள்கைகளுக்கு எதிரான, பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (ஜூன் 23) அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி, முதல்-அமைச்சகர்கள் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேசியவாதகாங்கிரஸ் தலைவர் சரத் பவார், மெகபூபா முஃப்தி, ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அக்கட்சியின் தேசிய செயலாளரும், மருமகனுமான அபிஷேக் பானர்ஜியுடன் கலந்து கொள்கிறார்.
இதனிடையே இந்தக் கூட்டம் பற்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரக் ஓ பிரைன் கூறியதாவது:-
” பாட்னா சென்றடைவதற்கு முன்பே இது ஒரு நல்ல தொடக்கம்…. நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்ற விரும்பும் அனைத்துக் கட்சிகளும் பலவிஷயங்களில் ஒரே பக்கத்தில் இருந்து வேலை செய்கின்றன. தற்போது எங்களிடம் அனைத்து கட்சித் தலைவர்களும் கூடுவதற்கு ஒரு தேதி, ஒரு இடம், ஒரு கொள்கை இருக்கின்றது.
அதேநேரத்தில், அடுத்த கூட்டத்துக்கான தேதி மற்றும் இடம் குறித்து பாட்னாவில் முடிவு செய்யப்படும். இதைத் தாண்டி கூட்டம் குறித்து கேள்வி எழுப்புவதும், ஊகிப்பது அவசியமில்லாதது.”
இவ்வாறு அவர் கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுகேந்து சேகர் ராய் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில்,”2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை அழித்துவிட்ட பாஜக அரசியல் அமைப்பை சிதைக்க முயல்கிறது. பாஜகவுக்கு எதிராக போராடும் கட்சிகளுக்கு ஒற்றுமை ஏற்படாவிட்டால் அது நாட்டின் துரதிர்ஷ்டம். எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையைக் கட்டமைக்கும் முயற்சி கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் போதே தொடங்கி விட்டது” என்றார்.
எதிர்க்கட்சித் தலைமை பற்றிய பிரச்சினை இந்த முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராய்,”ஊடகங்களும் பாஜகவும் மட்டுமே அதைப் பற்றிக் கவலைப் படுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கோ நாட்டு மக்களுக்கோ அதைப்பற்றிக் கவலையில்லை” என்றார்.
இதற்கிடையே எ திர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம், வீண் முயற்சி என்றும், இந்த சந்தர்ப்பவாத கூட்டணி எந்தவிதமான பலனையும் தராது என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து, “வீணான முயற்சி இது. கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு இதேபோன்ற முயற்சிகளை நாம் பார்த்தோம். அதன்முடிவு நம்முன்னால் இருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும் நம்புகிறார்கள். அவர்கள் நிலையில்லாத, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்” என்று மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.













