“மதிமுகவினர் எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது” – வானதி சீனிவாசன்
Share
ஆளுநரை திரும்பப் பெற மதிமுக எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரை யாராலும் மாற்ற முடியாது என பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவையடுத்து விசாரணை நடைபெறுகிறது என்று கூறினார்.
மேலும், மோடி, ஈடி யாராலும் திமுகவை அழிக்க முடியாது என அமைச்சர் உதயநிதி கூறியது குறித்த நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவை திமுகவினரே அழித்து விடுவர் என்றார். அத்துடன், ஆளுநரை திரும்பப் பெற மதிமுக எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் அரசியலமைப்பு சட்டப்படி யாராலும் மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.













