ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகருக்கு அவசர ஊர்தி வழங்கிய ரஜினிகாந்த்
Share
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் செய்து வரும் சமூக சேவை கடினமானது. ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று பலநாட்கள் இருக்கும். அதனை பெற எவரும் முன் வரமாட்டார்கள். அவ்வாறு பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கும் உடல்களை போலீசார் அனுமதியுடன் பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக தொய்வின்றி இந்த பணியை அர்ப்பணிப்பு மனதுடன் செய்து வருகிறார். இதுவரை 2,045 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன. பல மாநில முதல்-அமைச்சர்களின் பாராட்டுபெற்ற அவர் உலக சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார்.
அவரை முன்னாள் அதிபர் அப்துல் கலாம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்தி உள்ளனர். கொரோனா காலங்களிலும் மணிமாறன் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்து வந்தார். மேலும் தொழு நோயாளிகளுக்கு மனமுவந்து சேவையாற்றி வந்தார். இதுபற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், மணிமாறன் சேவையை மனதார பாராட்டி அவர் தடையின்றி சேவை செய்யும் வகையில் தனது அறக்கட்டளை சார்பில் ஒரு அவசர ஊர்தி வழங்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய ஆம்புலன்ஸ் பெற்று கொண்ட மணிமாறன் கூறியதாவது: ரஜினிகாந்த் அவசர ஊர்தி வழங்கியது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அவரது இந்த உதவி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. ரஜினிகாந்த் வழங்கிய அவசர ஊர்தி மூலம் ஆதரவற்றவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியும். மேலும் முதியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.













