LOADING

Type to search

இந்திய அரசியல்

‘பாஜக அரசை வீழ்த்த, நாடாளுமன்றத் தேர்தலை 17 கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும்’ பாட்னா கூட்டத்துக்குப் பின் நிதிஷ்குமார் அறிவிப்பு

Share

பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்த 17 கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு நிதிஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது.

அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

4 மணி நேரம்

மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, தலைவர்கள் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய நிதிஷ் குமார். “இந்த ஆலோசனைக் கூட்டம் நல்ல முறையில் நடந்தது. பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். வரும் மக்களவைத் தேர்தலை 17 கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்ற முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அடுத்த கூட்டம் சிம்லாவில்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தலை இணைந்து எதிர்கொள்வதற்கு ஏற்ப பொதுத் திட்டத்தை வகுக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம். இணைந்து செயல்படுவதற்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான திட்டங்களை வகுத்து செயல்படுவோம். மத்தியில் உள்ள பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு” என்று தெரிவித்தார்.

ராகுல் கருத்து

ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வோம். நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்றி, எங்கள் சித்தாந்தத்தை பாதுகாப்போம்” என்று தெரிவித்தார்.

“நாங்கள் இணைந்துள்ளோம். இணைந்தே போட்டியிடுவோம். வரலாறு இங்கிருந்து தொடங்குகிறது. வரலாறு மாற்றப்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பாசிச அரசுக்கு எதிராக பேசுவதே எங்களின் நோக்கம்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

சித்தாந்த வேறுபாடுகள்

செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “எங்களுக்குள் சித்தாந்த வேறுபாடுகள் சித்தாந்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்” என தெரிவித்தார்.

ஆம்ஆத்மி அதிருப்தி

டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காததால் ஆம் ஆத்மி கட்சி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கருப்புச் சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி இதுவரை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. இது அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. மாநிலங்களவையில் உள்ள எங்கள் கட்சியின் 31 எம்பிக்களும் இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி ஏன் அறிவிக்க மறுக்கிறது? காங்கிரஸ் கட்சி இவ்வாறு செயல்படும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பது கடினம்” என்று தெரிவித்துள்ளது.

சிபிஎம் கருத்து

சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி:

“காந்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி கோட்சேயை இந்தியாவில் ஆட்சியமைக்க வைக்கும் பா.ஜ.கவின் திட்டம் செல்லாது. நமது அரசியலமைப்புச் சட்டம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதனைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.”

இந்திய கம்யூ பொதுச் செயலாளர் டி.ராஜா: “பா.ஜ.க ஆட்சியில், அரசியல் சாசனம், ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சார்பற்ற தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுவருகிறது. அரசியல் சாசனத்யைக் காக்க பா.ஜ.கவை நீக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றாகப் பணியாற்றுவோம்.”

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி: “புறக்கணிக்கப்பட்டு வரும் ஜனநாயகத்தையும், தாக்குதலுக்கு உள்ளாகி வரும் மதச்சார்பற்ற தன்மையையும் பாதுகாக்க வேண்டும். அதற்காக இன்று அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.”

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா: “நம்முடைய இந்த போராட்டம் வெறும் அதிகாரத்திற்கானது அல்ல; அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளை காப்பதற்கான போராட்டம்.”

லாலு பிரசாத் யாதவ்: அனுமன் கவசத்தை கொண்டு கர்நாடகத்தில் பா.ஜ.கவை தகர்த்துவிட்டார். நாட்டின் நிலைமை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக மோசமாக உள்ளது. ஆனால் மோடி அமெரிக்காவிற்கு சந்தனகட்டையோடு செல்கிறார். பா.ஜ.கவை வீழ்த்த அனைவரும் தயாராகிவிட்டனர்.

சரத்பவார்: பீகாரில் இருந்து தொடங்கிய ஜெயபிரகாஷ் நாரயணன் இயக்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆதரவைப் போலவே எங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக்கும் ஆதரவு கிடைக்கும்.

இவ்வாறு தலைவர்கள் கருத்து வெளியிட்டனர்