அரசியல் கொள்கைகளை முதலில் வெளியிடட்டும்.. விஜய்யை ஆதரிப்பது பற்றி பின்னர் முடிவு செய்வோம் – உதயநிதி பேட்டி
Share
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, மாமன்னன் முழுக்க முழுக்க அரசியல் படம். அப்பா பையன் கதை. அப்பா கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். கதைப்படி வடிவேல் தான் கதாநாயன். நடிகர் வடிவேலை வைத்து படம் எடுக்க மாரி செல்வராஜ் மிகவும் பயந்தார். காரணம் அவர் வடிவேலுவின் தீவிர ரசிகர் ஆவார். நான்தான் சமாதானப்படுத்தி வடிவேலுவுடன் பேசி படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். ஜாதி மறுப்பு உள்ள படம். தேவர் மகன் படத்தோடு இந்தப் படத்தை ஒப்பிட்டு பேசுவது தவறு. நல்ல விஷயங்கள் நிறைய இந்தப் படத்தில் கூறியுள்ளோம். கால சூழ்நிலைகள் மாறும். முதலில் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றேன்.
பின்பு நடித்தேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். அரசியலுக்கு வந்து அமைச்சராகிவிட்டேன். எனக்கான மக்கள் பணி காத்திருக்கிறது. இது எனது கடைசி படம். இதற்குப் பிறகு படம் நடிப்பது பற்றி யோசிக்கக்கூட எனக்கு நேரமில்லை. அரசியல் வருகை குறித்து விஜய் இன்னும் தெளிவாக சொல்லவில்லை. அதை முதலில் அறிவிக்கட்டும். அரசியல் கொள்கைகளை தெரிவித்தால் விஜய்யை ஆதரிப்பதா? வேண்டாமா என்று முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.













