சென்னை புதிய முனையத்தில் விமான சேவை – 12 நாடுகளுக்கு இயக்கப்படுகிறது
Share
சென்னை விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த சர்வதேச புதிய விமான முனையத்தின் முதல் கட்டிடம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தொடங்கியது. அதன் பின்னர் மே மாதம் 3-ந் தேதி, 3 விமானங்கள் சோதனை அடிப்படையில், புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மேலும் சில விமானங்கள் புதிய முனையத்தில், சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமானமுனையத்தில், முழு அளவிலான, வழக்கமான சர்வதேச வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டபோது, சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டதால் அதனை சரி செய்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் முதல் வாரத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இருந்து, முழு அளவில் விமானங்கள் இயக்கப்படவில்லை. புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று முதல், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல்-2 ல் இருந்து இயங்கத் தொடங்கி உள்ளது. இதன்மூலம் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு புதிய விமான நிலையத்தில் இருந்து விமான சேவை அதிகரித்து இயக்கப்படுகிறது. மேலும் டி-3 பழைய சர்வதேச முன்னையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது. இதன்பின்னர் புதியமுனையத்தில் 2-ம் கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.













