LOADING

Type to search

இந்திய அரசியல்

தீட்சிதர்கள் எதிர்ப்பை மீறி, சிதம்பரம் கோவில் கனகசபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்

Share

நான்கு நாட்கள் நடந்த பரபரப்புகளுக்குப் பிறகு, சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி 24 ,25 ,26 ,27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபையில் (சிற்றம்பல மேடையில்) வழிபட கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலைத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர், இந்து சமய அறநிலையத் துறையினர் கடந்த 24-ம் தேதி பதாகையை அகற்றச் சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீட்சிதர்கள் தகராறு செய்தனர்.

இதையடுத்து கடந்த 26-ம் தேதி மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது. பதாகை அகற்றிய பிறகும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கனக சபையில் ஏறி வழிபட தீட்சிதர்கள் அனுமதிக்க மறுத்து வந்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் பிரமுகர் ஜெமினி ராதா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டவர்கள் கனக சபை வாயிலில் அமர்ந்து கனக சபையில் வழிபட அனுமதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பாரதீய ஜனதா கட்சியினர் அங்கு கூட்டமாக சென்று, இவர்களுக்கு எதிராக ஒம் முருகா, சிவ, சிவா என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால், கோவிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில் கனக சபையின் மற்றொரு வழியாக காவல் துறையினருடன் ஏறி வழிபட முயன்றனர்.

தீட்சிதர்கள் அவர்களை ஏற விடாமல் தடுத்து கீழே தள்ளி விட்டனர். இதனால் தீட்சிதர்கள் அனைவரும் கனக சபையை பூட்டிவிட்டு கீழே வந்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். அப்போது தீட்சிதர் ஒருவர் தாக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலர்கள், காவல் துறை சார்பில் கூறுகையில், “இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் அரசாணையை நிறைவேற்றும் வகையில் அமைதியான முறையில் கனக சபையில் ஏறி வழிபாடு செய்து விட்டு உடனே கீழே இறங்கி விட்டனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர். காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினர் தீட்சிதர்கள் மீது சுண்டு விரல் கூட படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது. மேலும், தீட்சிதரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளன. மேலும், கனக சபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறாத நிலையில் போலீஸாரும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால் தீட்டு என கருதி அவர் உடுத்தி இருந்த உடைகளை மாற்றி விட்டு புதுத்துணியை போட்டுக் கொண்டு மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்று விட்டார் என்பதுதான் உண்மை” என்றனர்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 28) காலை 7 மணி முதல் கனக சபையில் பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழி பட அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்தனர். தெய்வத் தமிழ் பேரவையினர் சிவ வாத்தியங்களுடன் சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்குள் சென்று கனக சபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி சாமி தரிசனம் செய்தனர்.