கேரளாவில் தந்தையிடம் வாங்கிய லாட்டரியில் மகளுக்கு ரூ. 75 லட்சம் பரிசு
Share
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அரூர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். லாட்டரி கடை நடத்தி வருகிறார். அவருக்கு ஆஸ்லி, அங்கிதா, அஞ்சிதா என்று 3 மகள்கள் உள்ளனர். ஆஸ்லிக்கு திருமணமாகிவிட்டது. ஆனாலும் கணவர் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
ஆஷ்லி தனது தந்தையின் கடையில் இருந்து அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவது உண்டு. பணம் கொடுத்து தான் அவர் டிக்கெட்டுகளை வாங்குவார். எப்போதும் ஒன்றுக்கு மேல் டிக்கெட்டுகளை எடுப்பது வழக்கமாம். நேற்று முன்தினம் குலுக்கல் நடந்த
ஸ்திரீ சக்தி லாட்டரி 12 டிக்கெட்டுகளை வாங்கினார்.
இதில் எல்.ஜி.88 30 30 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ. 75 லட்சம் கிடைத்தது. இது குறித்து ஆஸ்லி கூறியது: எனக்கு லாட்டரி டிக்கெட் எடுக்கும் பழக்கம் உண்டு. எப்போதும் என்னுடைய அப்பாவின் கடையில் மட்டுமே டிக்கெட் வாங்குவேன். எடுக்கும்போது ஒன்றுடன் நிறுத்துவதில்லை. குறைந்தது 10 டிக்கெட்டுகளாக வாங்குவேன். ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் 12 டிக்கெட்டுகளை வாங்கினேன். இதில் ஒன்றுக்கு தான் முதல் பரிசு ரூ. 75 லட்சம் கிடைத்தது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்பாவின் கடையிலிருந்து வாங்கி எனக்கு முதல் பரிசு ரூ. 75 லட்சம் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தில் இடியும் நிலையில் உள்ள எங்களது பழைய வீட்டை புதுப்பித்து கட்ட தீர்மானித்து உள்ளேன். எனது தங்கைகளுக்கும் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.













