LOADING

Type to search

இந்திய அரசியல்

புதுச்சேரிப் பேராசிரியர் மு. இளங்கோவனுக்குத் தமிழ்விக்கி – தூரன் விருது

Share

புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவனுக்கு  2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருது ரூபாய் இரண்டு இலட்சம் பரிசுத்தொகை, சிற்பம், சான்றிதழ் கொண்டது.

 கடந்த முப்பதாண்டுகளில் ஒரு கல்வியாளராகவும் ஆய்வாளராகவும் மு. இளங்கோவன் ஆற்றியுள்ள பணிகள் மிக விரிவானவை. தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர் இவர். பாரதிதாசன் பெருமையை வெளிப்படுத்த வெளிவந்த பொன்னி இதழ்களை மீட்டுத் தொகுத்தவர். தமிழறிஞர்களின் வாழ்க்கையினைத் தேடித்தேடி ஆவணப்படுத்தியவர். இசைத்தமிழ் ஆய்வாளர்களை  ஆவணப்படுத்தியவர். இவர் உருவாக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உலக அளவில் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். கணினித்தமிழைப் பரவலாக்கியவர். தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுத்தவர். இணையத்தில் இவர் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரைகள் ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமாக அமைந்து, இணையப் பயன்பாட்டாளர்களுக்கு உதவி வருகின்றன. 

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் (https://tamil.wiki/wiki/) சார்பில், பெரியசாமித் தூரன் நினைவாக, ஆண்டுதோறும் தமிழ்விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதையான பெரியசாமித் தூரனின் பங்களிப்பைப் போற்றும் முகமாக இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விருது விழா ஆகஸ்டு மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில்  ஈரோட்டில் முழுநாள் நிகழ்வாக நடைபெறும் என்றும் இந்த விழாவில் மு.இளங்கோவனுக்கு விருது வழங்கப்படும் என்றும் எழுத்தாளர் ஜெயமோகன் தம் இணையதளத்தில் அறிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருது, சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் விருது, தமிழக அரசின் ஊடகத் தமிழ் விருது உள்ளிட்ட விருதுகளை இதற்கு முன்பாக இவர் பெற்றுள்ளார்.

https://www.jeyamohan.in/184670/