LOADING

Type to search

இந்திய அரசியல்

அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்குவதாக ஆர்என் ரவி அறிவிப்பு: ‘ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ “சட்டப்படி சந்திப்போம்” என்று, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

Share

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். ஆனால் ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்றும், சட்டப்படி இதை எதிர்கொள்வோம் என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை இன்று (ஜூன் 29) மாலை ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது.

அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனங்கள் குவிந்தன

ஆளுநரின் இந்த அறிவிப்பு வெளியானதுமே அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன.

திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை கடுமையாக சாடின.

“ஆளுநருக்கு அமைச்சரை சேர்க்கவோ நீக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது. நீதிமன்றத்தால் அவர் குட்டுப்படுவார்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

செந்தில்பாலாஜியை நீக்குவதாக அறிவித்த ஆளுநரின் நடவடிக்கையை சபாநாயகர் அப்பாவும் கடுமையாக கண்டித்தார். ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். ‘அதிகாரமே கிடையாது’ இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஆளுநருக்கு அப்படி ஒரு அதிகாரமே கிடையாது. இதை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்” என்று கூறினார்.