“இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார்” – ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்
Share
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என் ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக நேற்றிரவு ஆளுநர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் திடீர் திருப்பமாக தனது உத்தரவை ஆளுநர் நிறுத்திவைத்தார். அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் இரவு கடிதம் அனுப்பியுள்ளார். “அதில், “உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின்படி அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்டுள்ளேன். என்னிடம் இருந்து அடுத்த தகவல் வரும் வரை செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆளுநரின் கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் முதலமைச்சரின் தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமில்லை என்றும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பதோ அல்லது நீக்கம் செயவதோ முதல்வரின் முடிவுகளுக்கு உட்பட்டது. பதவிப்பிரமாணம் செய்துவைக்க மட்டுமே ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது ” என்றும் அதில் தெரிவித்துள்ளார்.













