LOADING

Type to search

இந்திய அரசியல்

“பாஜகவே தேசிய அளவில் பிரதமர் மோடியை முன்னிறுத்தவில்லை” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Share

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்க, தான் நடவடிக்கை எடுத்து வருவதால், மத்திய அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை பாஜக குறிவைப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்

வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கொள்கை, அரசியல் சட்டம் என அனைத்திற்கும் எதிராகச் செயல்படும் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்துவோம் என்ற கருத்தியலே எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஆளுநர் ரவி பேசி வருவதாக விமர்சித்தார். தமிழ்நாடு அரசை சுமுகமாக செயல்படவிடக் கூடாது என்பதே ஆளுநரின் நோக்கம் என்றும், தமிழ்நாடு மக்களின் நலனுடன் ஆளுநர் விளையாடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என்.ரவியை கட்டுப்படுத்தாவிட்டால், தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்றும் காட்டமாக தெரிவித்தார். பாஜக தனது அரசியல் எதிரிகளுடன் சமரசம் செய்ய அமலாக்கத்துறையை அதன் கிளையாக மாற்றிவிட்டதாகவும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சி, பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை திமுக ஒரு போதும் மாற்றிக் கொள்ளாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் மீதே வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரலாம் என்ற தனது நிலைப்பாடு சரியானது என்றும் கூறினார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்க, தான் நடவடிக்கை எடுத்து வருவதால், மத்திய அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை பாஜக குறிவைப்பதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். இருப்பினும் பாஜகவிற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது என்றும் கூறினார்.பாஜகவிற்கு எதிரான கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தேவையில்லை என்றும், இலக்கு இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார்.

ஜனநாயகம், சமூகநீதி, மதசார்பின்மைக்கு எதிரான பாஜக-வை தோற்கடிப்போம் என்ற எண்ணமே தங்களது கூட்டணிக்கு வழிகாட்டுவதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவே இன்னும் தேசிய அளவில் பிரதமர் மோடியை முன்னிறுத்தவில்லை என்றும் கூறினார்.