மராட்டியத்தில் கன்டெய்னர் லாரி – கார் மோதி விபத்து: 10 பேர் பலி
Share
மராட்டிய மாநிலத்தில் அதிவேகமாக வந்த கன்டெய்னர் ஒன்று கார் மீது மோதியதில் சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக பலியாயினர் .
மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று இன்று (ஜூலை 4) காலை கார் மீது மோதியது. மும்பையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மும்பை – ஆக்ரா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் 10 பேர் பலியான நிலையில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், கன்டெய்னர் லாரி அதிவேகமாக சாலையில் பயணித்தது உறுதியாகியுள்ளது. அதிவேகத்தில் வந்த அந்த லாரி, எதிரே வந்த வெள்ளை நிற கார் மீது மோதி, புழுதி பறக்க வாகனம் எது எங்கே இருக்கிறது என்று அறிந்துகொள்ள இயலாமல் கட்டுப்பாடின்று தாறுமாறாக ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அப்போது, சாலையோரம் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பொது மக்கள் மீதும் மோதியுள்ளது. வாகனங்களில் பயணித்தவர்கள், சாலையோரம் நின்றவர்கள் என இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் மகாராஷ்டிராவில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய சோகம் நீங்குவத்றகுள் அம்மாநிலத்தில் இன்னொரு பெரிய சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.













