“மாமன்னன்” – நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிக்கு நன்றி சொன்ன மாரி செல்வராஜ்!
Share
மாமன்னன் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், தனது பக்கத்தில் படக்குழுவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதற்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மாமன்னன் திரைப்படம். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நடந்த சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், ‘எனது முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.













