லைகாவுடன் கைகோர்த்த ‘2018’ பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்
Share
பிரபல மலையாள இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து புதியப் படம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளமும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தப் படம் ‘2018’. இந்தப் படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், நரேன், ஆசீஃப் அலி, வினீத் சீனிவாசன், லால், அபர்ணா பாலமுரளி, கலையரசன், தன்வி ராம் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நோபின் பாலி பின்னணி இசை அமைத்திருந்தார்.
கடந்த மே மாதம் 5 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மலையாள திரையுலகில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் ‘2018’ படம் பெற்றது. இந்நிலையில், ‘2018’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், தனது அடுத்தப் படத்துக்காக லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி, கன்னட நடிகர் கிச்சா சுதீப், தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.













