LOADING

Type to search

இந்திய அரசியல்

தென் மேற்குப் பருவ மழையால் கேரளாவில் காட்டாற்று வெள்ளம்: தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் கயிறு கட்டி மீட்பு

Share

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பம்பை, பெரியாறு, அச்சன்கோவில், மணிமலை, உள்பட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆலுவா சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார் குட்டி அணை திறக்கப்பட்டது. திருவனந்தபுரம், கொல்லம் தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே காசர்கோடு, கண்ணூர், திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கனமழையால் கோட்டயம் மாவட்டம் முண்டகயம் அருகே உள்ள பெருவந்தானம் பகுதியில் உள்ள மணிமாலை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் இருந்து செல்லும் கால்வாயிலும் வெள்ளம் அதிகரித்தது. இந்த கால்வாயின் மறுகரையில் தேயிலை தோட்டம் உள்ளது.

வெள்ளம் காரணமாக இங்கு வேலைக்குச் சென்ற 17 தோட்ட தொழிலாளர்களால் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இதைத் தொ டர்ந்து அந்த பகுதியினர் விரைந்து செயல்பட்டு கயிறு கட்டி 17 தோட்ட தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர்.

மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் பலி தர்ப்பணம் செய்வதற்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிர்தப்பினர் சுசீலா(60) அனுஸ்ரீ(12) ஆகியோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவர்கள் பாட்டி, பேத்தி என்ற உறவு முறை ஆகும்.

கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்து உள்ளதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தோட்டப்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.