தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Share
தேனி மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார்.
அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட சுமார் 76 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்று பெற்றி பெற்றார். ரவீந்திநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதி வாக்காளர் மிலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சொத்து விவரங்களை மறைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்திருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்ப்டடிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தீர்ப்பு வழங்கினார். தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என அதிரடி தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.













