செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஒத்திவைத்த மூன்றாவது நீதிபதி
Share
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையை மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்தார். இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என நீதிபதி பரத சக்ரவர்த்தியும் தீர்ப்பளித்திருந்தனர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-ம் நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
அவர் முன்னிலையில் பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான என்.ஆர்.இளங்கோ, வழக்கை 11ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவசரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். வழக்கை சனிக்கிழமை விசாரிக்கலாமே என நீதிபதி கார்த்திகேயன் கூறினார். சனிக்கிழமை விசாரணைக்கு நாங்களும் தயார் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை நாள் முழுவதும் விசாரிக்க முடியுமா என்பது குறித்து இன்று முடிவு செய்யலாம் என்றும் தலைமை நீதிபதி அனுமதித்தால் சனிக்கிழமை விசாரிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். திங்கள் கிழமை கூட விசாரணைக்கு எடுக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். விசாரணை நாள் குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் எனக்கூறி, வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.













