அண்ணாமலை விழாவில் கலந்து கொண்டதால் நீக்கப்பட்ட அதிமுக பிரமுகர்
Share
“ஜெயலலிதாவே வந்தாலும் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி விட்டுத்தரமாட்டார்” என விமர்சனம்
திண்டிவனம் அருகே கடந்த 5-ம் தேதி ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடத்திவைத்தார். இந்த திருமணத்தில் பங்கேற்ற அறக் கட்டளைத் தலைவரும், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவருமான முரளி என்கிற ரகுராமன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 7) விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு வந்த முரளி என்கிற ரகுராமன், தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை வங்கியின் பொது மேலாளர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார்.
பின்னர் அவர் வங்கியின் நுழைவாயிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”என் மகன் ஒருங்கிணைப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 39 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இதற்கான விளக்கத்தை அண்ணாமலை கொடுத்துள்ளார். 1984-ஆம் ஆண்டில் அதிமுக கிளைச் செயலாளர் பதவியில் தொடங்கி 2004-ம் ஆண்டு மாவட்ட புரட்சித்தலைவி பேரவைச் செயலாளர் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தேன். 2006-ம் ஆண்டு ச்ட்டப்பேரவைத் தேர்தலில் சி.வி.சண்முகம், கணபதி வெற்றி பெற வைத்ததற்காக என்னுடைய இரு கிரஷர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வானூர் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த 11 ஒன்றியக்குழு உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தேன்.
தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக, என் மகன் நடத்திய திருமண விழாவில் தந்தை என்ற முறையிலும், அறக்கட்டளையின் தாளாளர் என்ற முறையிலும் கலந்து கொண்டேன்.
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு காரணத்தை தேடிக் கொண்டிருந்தனர். அண்ணாமலை என்றால் தமிழ்நாட்டில் அனைவருக்கும் கிலி பிடிக்கிறது என்றேன். இவர்களுக்கு ஏன் அந்த பயம் வந்தது என்று தெரியவில்லை.
என்னை ராஜினாமா செய்யக் கூறி யாரும் நிர்பந்திக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சியில் இணைவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதிமுகவில் ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு என் நிலைதான் அதிமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்களுக்கு உள்ளது. ஜெயலலிதாவே எழுந்து வந்து தன்னுடைய பொதுச் செயலாளர் பதவியைத் தருமாறு கேட்டால், தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி உங்களையே கட்சியிலிருந்து எடுத்து விட்டதாகக் கூறுவார்.” இவ்வாறு அவர் கூறினார்.













