LOADING

Type to search

இந்திய அரசியல்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 3-ம் வாரத்தில் சிறப்பு முகாம்கள்

Share

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்னையில் ஜூலை 3-ம் வாரம் முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட செயலாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிக் கூடங்கள். சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இரவு காப்பகங்கள் என தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

சிறப்பு முகாம்கள் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், ’மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் துறை ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு முகாம்கள் நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் பணியாற்றுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு முகாமிற்கும் ஒரு பொறுப்பு அலுவலர், உதவிப் பொறியாளர், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பின் அமைச்சுப் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்பார்வையிட மண்டல அலுவலர்கள் தலைமையில், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள், உதவி கணக்கு அலுவலர்கள், உதவி மின் பொறியாளர்கள் நிலையில் ஒரு அதிகாரியும், அந்தப் பகுதியை சார்ந்த ஒரு உதவி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தலைமையகத்திலிருந்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.