LOADING

Type to search

இலங்கை அரசியல்

அரசுகள் உரிமைகளை வழங்குவதை விட மறுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன

Share

– மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் தெரிவிப்பு

அரசுகள் உரிமைகளை வழங்குவதை விட மறுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன – மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் தெரிவிப்பு

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் சர்வதேச உரிமைகளை தமது நாட்டுக்குள் நடைமுறைப்படுத்துவதை விடுத்து அதனை மறப்பதிலே அதிக கவனம் செலுத்துகின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த மனித உரிமைகள் கற்கை நெளியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் தொடர்பான கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களாகிய நீங்கள் கொள்கை கோட்பாடு பற்றி படித்திருப்பீர்கள்.

உலகளாவிய நீதியில் மனித உரிமைகள் என்ற விடயம் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக காணப்படுகின்ற நிலையில் மனித உரிமைகள் என்பது சவால் மிக்க விடயமாக காணப்படுகிறது.

சர்வதேச நீதியாக மனித உரிமைகளைப் பாதுகாக்கவென பல சட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் இலங்கை போன்ற கீழத்தேச நாடுகள் அவற்றை தமது அரசுகளில் ஏற்றுக்கொள்வதை விட எவ்வாறு அதனை நிராகரிக்கலாம் என்பதிலே அதிகம் கவனம் செலுத்துகின்றன.

சர்வதேச நீதியில் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களை ஏற்றுக் கொண்ட நாடுகள் கூட தமது நாட்டு அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை.

இவ்வாறான நிலையில் மனித உரிமைகள் தொடர்பான கல்வியை முடித்துக் கொண்ட மாணவர்களாகிய நீங்கள் மனித உரிமைகள் பாதுகாவலராக சமூகத்தில் செயல்படும் போது கொள்கை கோட்பாடு மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்கள் தொடர்பில் களத்தில் பணியாற்றும் போது வேறுபாடுகளை உணரக்கூடும்.

உதாரணமாக அமைதியாக ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் அடிப்படை உரிமைகளாக அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவை தடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் இலங்கையில் அதிக இடம்பெற்றிருக்கின்றன.

அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரத்தை வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தினார்கள் என கொழும்பில் இடம் பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்கள்.

இதை மாணவர்களாகிய நீங்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் சட்டத்தில் இருக்கும் விடையங்கள் நீங்கள் படித்த கல்வி நடைமுறையில் எவ்வாறு தாக்கத்தை செலுத்துகின்றது அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதே உங்களுடைய கல்வியுடான வழிகாட்டலாகும்.

மனித உரிமைகள் என்பது சவாலான விடயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கூட நாளுக்கு நாள் வித்தியாசமான முறைப்பாடுகள் வருகின்றன.

சாதாரண மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான போதிய அறிவின்மை காணப்படும் நிலையில் அவர்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு மனித உரிமைகள் செயற்பாட்டில் ஈடுபடும் அனைவருடைய பொறுப்பாகும்.

குறிப்பாக சாதாரண மக்கள் அரச அலுவலகங்களில் தமக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் நிர்வாகிகளிடம் முறையிடும் போது பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான உரிய தீர்வு வழங்கப்படுவதில்லை.

ஆகவே மனித உரிமைகள் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களாகிய நீங்கள் கற்றலுடன் மட்டும் நின்று விடாமல் சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை உரிய முறையில் அனுகி அவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.