பிரதமர் என்ன சொன்னார் என்பதை இந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும் – வானதி
Share
பிரதமர் மோடி என்ன கூறினார் என்பதை இந்தி பண்டிட் ஒருவரை வைத்து உதயநிதி ஸ்டாலின் முறையாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை, வடகோவை பகுதியில் காமராஜர் சிலைக்கு வானதி சீனிவாசன் தனது கட்சியினருடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆட்சி.
காமராஜர் அன்று செய்த செயலை பாஜக நினைவு கூறுகிறது. தமிழகத்தின் கல்விச் சூழலால் கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களுக்காக பெற்றோர் தங்கள் வருமானத்தில் பெரும் செலவு செய்யும் சூழல் உள்ளது. குடும்பத்திற்கு கல்வி சுமையாக மாறி வருகிறது. தமிழக அரசு நல்ல கல்வியை தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். பிரதமர் என்ன பேசினார் என்பதை உதயநிதி முழுமையாகக் கேட்க வேண்டும். மோடி சொன்னதை இந்தி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என தெரிவித்து விட்டு மாற்றிப் பேசுகின்றனர். மோடி பேசியதை உதயநிதி ஹிந்தி பண்டிட் வைத்து கேட்டுக் கொள்ள வேண்டும். இரவு நேர பாடசாலையை விஜய் துவங்கியது நல்ல விஷயம். கல்விக்காக செய்வதை வரவேற்கிறோம். என்ன மாதிரி செயல்படும் என்பதைப் பார்ப்போம். யார் சமூகத்திற்காக பங்களித்தாலும் பாராட்டுகிறேன். மக்கள் நீதி மய்யம் என்னை கண்டித்து போராட்டம் வைத்துள்ளனர்.
எம்எல்ஏ பணி என்பது ஒரு புறம். பணியைத் தாண்டி கூட தொகுதியில் வேலை செய்துள்ளேன். அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது தொடரும். மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இவர்கள் தேர்தல் என்று வரும்போது சேர்கின்றனர். சட்டமன்றத்தில் வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் கூட நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும் போது மோடிக்குத்தான் வாக்களிக்கிறார்கள். சந்திரயான் 3 இந்தியாவின் பெருமை. சிறு சிறு நாடுகள் கூட இந்தியாவை அணுகுகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். மிகப்பெரிய சந்தை இந்தியாவுக்கு உள்ளது ” என்றார்.













