சரத் பவாரை சந்தித்தார் அஜித் பவார்
Share
மத்திய முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த நிகழ்வு மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சந்திப்பு குறித்து அஜித் பவாரின் ஆதரவாளர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மகாராஷ்டிர அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக, தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஜித்பவார், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து பேசினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார், திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது மகாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் பவார் துணை முதலமைச்சராகவும், அவருடன் சென்ற எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவார் மற்றும் அவரது அண்ணன் மகனுமான அஜித் பவார் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அஜித் பவார் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி தலைவர் சரத் பவார் கூறியிருந்தார். இந்த நிலையில், அஜித் பவார் அணியினர் திடீரென, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தனர். மும்பையில் ஒய்.பி. சவான் மையத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கிளர்ச்சிக்கு முன் சரத் பவாருடன் நெருக்கமாக இருந்த மூத்த தலைவர்கள் பிரஃபுல் பட்டேல், ஜிதேந்திரா உள்ளிட்டோர் சரத் பவாரை சந்தித்து பேசினர்.













