பொன்முடி வீட்டில் 2 அலமாரிகளை திறக்க முடியாமல் திணறும் அமலாக்கத்துறை
Share
விழுப்புரத்திலுள்ள பொன்முடி வீட்டிலுள்ள அலமாரியின் பூட்டை திறக்க முடியாமல் அமலாக்கத்துறையினர் திணறிவருகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் கடந்த மாதம் 13ஆம் தேதி சோதனை நடத்தினர். இந்நிலையில், சென்னையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள இல்லத்தில் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகமாணி ஆகியோர் உள்ள நிலையில், இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை 10 மணியளவில் அமைச்சர் வீட்டிற்கு அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரியும் வந்து விசாரணை நடத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து 11 மணியளவில் தடயவியல் துறையினரும் சோதனையில் இணைந்து கொண்டனர். இதனிடையே, அமைச்சர் பொன்முடியை பார்க்க வந்த மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது கைபேசியை வாங்கி சோதனையிட்டதுடன், அமைச்சரை பார்க்க வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து விட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அவரை விடுவித்தனர்.
இந்த சோதனை குறித்து தகவலறிந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் அங்கு வரத் தொடங்கியதால் பரபரப்பு நிலவி வருகிறது. அமைச்சர் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உட்பட மூன்று வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதேபோன்று விழுப்புரத்தில் திருப்பான்ஆழ்வார் தெருவில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையிட சென்றது. அப்போது வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் வெகுநேரம் காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து வீட்டை திறந்து சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் பொன்முடி அறையில் உள்ள இரண்டு அலமாரிகளை திறக்க சாவி இல்லாததால், அதிகாரிகள் பூட்டை திறப்பதற்காக சாவி செய்யும் நபர்களை வரவழைத்தனர். அவர்களும் நீண்ட நேரம் முயற்சித்து அலமாரிகளை திறக்க முடியாததால் ஏமாற்றத்துடன் வெளியேறினர். அதைத்தொடர்ந்து அலமாரிகளை திறக்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.













