LOADING

Type to search

இலங்கை அரசியல்

அதிகாரப் பகிர்வு தொடர்பில் அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

Share

நடராசா லோகதயாளன்

-பேச்சை முறித்துக்கொண்டு வெளியேறினார் ஜனாதிபதி

-மாகாணத் தேர்தலை நடத்த வலியுறுத்தியதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவருக்கு கோபம்.

– வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோர வேண்டி வரும் என்றார் சம்பந்தன்

-அதிகார பகிர்வு அல்லது தேர்தல் இதில் ஏதாவது ஒன்றுதான் – ரணில் காட்டம்

அரசமைப்பின் 13ஆவது திருத்ததத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காகக் கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேச்சை முறித்துக்கொண்டு திடீரென வெளியேறிச் சென்றார். இதனால் கூட்டம் எந்தவித உருப்படியான தீர்மானமோ முடிவோ இன்றி இடைநடுவில் முடிவடைந்தது.

கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசும்போது, அதிகாரப் பகிர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார் என்று தெரிவித்திருந்தார். அவர் நாடு திரும்பிய பின்னர் நேற்று அந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரவு 8 மணி வரையும் தொடர்ந்தது. கூட்டத்தின் தொடக்கத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றினார். மாகாண சபைகளைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதானால், அதில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகளைச் சீர் செய்யவேண்டும் என்றார். அதற்காகவே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன என்றார் ரணில்.

நாட்டின் கொள்கைசார் முடிவுகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டு ஏனைய அனைத்து விடயங்களையும் மாகாண சபைகள் மேற்கொள்ளும் வகையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்றார் அவர்.

அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, வீர சுமன ஆகியோர் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர். விமல் வீரவன்ஸ, உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்றோர் வழக்கம்போல அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தனர்.

தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையில், ”தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உள்ளவர்கள். அதனை உள்ளகமாகப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம், நீண்ட காலமாகக் காத்திருக்கின்றோம். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. காலத்தை இழுத்தடிப்பதும் ஏமாற்றுவதுமே தொடர்கின்றது. இப்படிச் சென்றால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோர வேண்டி வரும். பயன்படுத்துவதற்காக வெளிநாடுகளின் உதவிகளை நாடவேண்டியவர்களாக இருப்போம்” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

இதுவரைக்கும் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே ஆராயப்பட்டு இணங்கப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் மீண்டும் கூட்டங்கள் தேவையில்லை என்றும் சம்பந்தன் காட்டமாக தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் உரையாற்றும்போது, மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க “அது பற்றிப் பின்னர் பேசலாம், அது பற்றி ஆராய்ந்து தேர்தலை நடத்தும் முறையைத் தீர்மானிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும்” என்று பதிலளித்தார்.

அப்போது குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ”இந்த நாடாளுமன்றம் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்கனவே ஒரு தெரிவுக் குழுவை சபாநாயகர் தலைமையில் நியமித்தது. அதன் அறிக்கையும் இங்கே இருக்கின்றது (உயர்த்திக் காட்டினார்). அதில் பழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றது. அதற்காகவே என்னால் தனிநபர் சட்டவரைவு ஒன்றும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது” என்றார்.

உடனே ஆத்திரப்பட்டுக் குறுக்கிட்ட ஜனாதிபதி, நீங்கள் அதிகாரப் பகிர்வைத்தானே இதுவரை கேட்டு வந்தீர்கள், இப்போது எதற்குத் தேர்தலைக் கேட்கிறீர்கள் என்று எகிறினார்.

அதற்குப் பதிலளித்த சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர், நாம் நீண்ட காலமாகவே தேர்தலை வலியுறுத்தி வருகின்றோம், அதற்காகவே சட்டவரைவையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கின்றோம் என்றனர். அதற்கு இப்போது இரண்டையும் செய்ய முடியாது இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும் என்று ஆத்திரப்பட்டார் ஜனாதிபதி. அதிகாரப் பகிர்வு அல்லது தேர்தல் இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும் என்றார் அவர்.

அப்படி அதிகாரதைப் பகிர்ந்து கொண்டாலும் யாருடன் பகிர்ந்து கொள்வீர்கள்? தேர்தலை நடத்தி மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால்தானே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்? எனவே இரண்டும் வெவ்வேறானவை இல்லையே. தேர்தலையும் நடத்திக்கொண்டு அதிகாரப் பகிர்வு விடயங்களையும் முன்கொண்டு செல்லலாம் என்று விளக்கமளித்தார் சுமந்ததிரன்.

அப்போது இடைமறித்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், மாகாண சபைகைளப் பலப்படுத்தும் வகையில் அதிகாரப் பகிர்வை முதலில் செய்து கொண்டு பின்னர் தேர்தலை நடத்தலாம் என்றார். ஆனால் அதனை முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் அறிவித்தார். ”இது வடக்கு மாகாணத்தின் ஒரு நாடாளுமன்றஉறுப்பினரின் (விக்கி) கருத்து மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தலைவர்கள் இங்கிருக்கிறார்கள், அவர்கள் சம்மதத்துடன் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை எதிர்கின்றோம்” என்றார்.

”அதிகாரப் பகிர்வைக் கேட்டு வந்த நீங்கள் திடீரென இப்போது எதற்கு தேர்தலை வலியுறுத்துகிறீர்கள்” என்று ஆத்திரத்துடன் கேட்ட ஜனாதிபதி, சரி இத்துடன் கூட்டம் முடிகின்றது என்று கூறிக்கொண்டு கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இதனால் கூட்டம் பாதியிலேயே எந்தவித உருப்படியான முடிவுகளும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

”சமஷ்டியைத்தான் கேட்டிருப்போம் 13ஐக் கேட்டிருக்கவே மாட்டோம்” என்று அந்த கூட்டத்தில் விக்னேஸ்வரன் ரணிலுக்கு எடுத்துரைத்தார்.

தமிழ் மக்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தால் சமஷ்டியைத்தான் கேட்டிருப்போம் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தைக் கேட்டிருக்கமாட்டோம் என்று அந்த சர்வகட்சிக் கூட்டத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் தான் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

”அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீங்கள் நினைத்து நினைத்த மாதிரியெல்லாம் மாற்ற முடியாது. இரண்டு இறமையுள்ள நாடுகள் சேர்ந்து செய்துகொண்ட ஒப்பந்தம்தான் 13ஆவது திருத்தம். அது தமிழ் மக்களுக்காகத்தான் செய்யப்பட்டது. ஆனால் அதில் தமிழ் மக்கள் கையெழுத்து வைக்கவில்லை. அதனால் நீங்கள் நினைத்தபடி அதனை மாற்ற முடியும் என்று எண்ணவேண்டாம். அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் கையெழுத்து வைக்கும் நிலமை இருந்திருந்தால் நாங்கள் அப்போதே சமஷ்டியைத்தான் கேட்டிருப்போம். 13ஆவது திருத்தத்தைக் கேட்டிருக்கமாட்டோம்”.

கடந்தகால வரலாற்றை நினைவுபடுத்திய அவர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகிய மூவரும் 1987ஆம் ஆண்டே அப்போதைய பாரதப் பிரதமர் ரஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தில் 13ஐ நிராகரித்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினார். எனவே நீங்கள் 13ஐ நடைமுறைப்படுத்துவது ஏதோ தமிழர்களுக்கு எதையோ கொடுக்கப்போகிறீர்கள் என்று காட்ட முற்படவேண்டாம். இது சட்டத்தில் ஏற்கனவே இருக்கின்றது. இருப்பதை நடைமுறைப்படுத்தத்தான் பார்க்கிறோம் என்று விளக்கிய வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

”மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது அவர் முன்பாக 9 மாகாணங்களின் முதலமைச்சர்களும் நடத்திய கூட்டத்தில், எங்களுக்குச் சகல உரிமைகளும் வேண்டும் சமஷ்டி வேண்டாம் என்று சிங்கள முதலமைச்சர் ஒருவரே கூறினார். சகல உரிமைகளும் வேண்டும் என்று சிங்கள முதலமைச்சரே சொன்னதைக் கவனத்தில் எடுக்கவேண்டும். ஆகவே எல்லா உரிமைகளையும் மாகாணங்களுக்குத் தரவேண்டியதுதான் உங்கள் பொறுப்பு” என்று வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பொலிஸ் அதிகாரங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது. அதனை உடனடியாகச் செய்ய முடியாது என்றும் அதற்கான சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை என்பதால், காலப்போக்கில் அதனை நிறைவேற்றலாம் என்றும் ரணில் தெரிவித்திருந்தார்.

இந்த சர்வகட்சி கூட்டத்தில் கந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் இந்த கூட்டம் குறித்த தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

”13ம் திருத்தத்தை முழுமையாக பொலிஸ் அதிகாரத்துடன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு SLPP பொது செயலாளர் சாகல காரியவாசம், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிது குமாரதுங்க, சரத் வீரசேகர ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

SJB, TNA ஆகிய கட்சிகள் தேர்தல் நடத்தும்படி கோரினர்.

இந்நிலையில் “13ஐ முழுமையாக வைத்து தேர்தல் நடத்தினால், தெற்கின் ஏழு மாகாணங்களிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை ரணில் வழங்கி விட்டார் என்பதையே

அடிப்படையாக கொண்டு தென்னிலங்கையில் இனவாத பிரசாரம் நடக்கும். ஆகவே தேர்தலை நடத்த முடியாது” என ஜனாதிபதி ரணில் திட்டவட்டமாக கூறி விட்டார்.

ஆகவே, எக்காரணம் கொண்டும், ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும், ரணில் நடத்த விட மாட்டார் என்பது தெளிவாகிறது.

இதுதான் அரசியல் யதார்த்தம்.

ஆகவே நாம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவோம். புதிய ஜனாதிபதி, அதையடுத்து புதிய பாராளுமன்றம், என்ற நிலைமாறல்களுக்கு பிறகுதான் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட முடியும்”.