LOADING

Type to search

இந்திய அரசியல்

நெய்வேலி போராட்டம் கலவரமாக மாறியது: காவல்துறை மீது கல்வீச்சு – துப்பாக்கிசூடு

Share

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 திறந்த வெளிசுரங்கங்களை அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே நிலக்கரி எடுக்க போதிய இடமில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முதற்கட்ட பணியை தொடங்கியது. அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இந்த பணி 2-வது நாளாக தொடர்ந்தது. மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. மேலும் தர்மநல்லூரில் இருந்து வளையமாதேவி வரை 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பரவனாறு வெட்டப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது. இதனை கண்டித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பேருந்துகளின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர். முற்றுகை போராட்டம் முடிந்த பின்னர் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட சென்றனர். அவர்களை காவல்துறை தடுத்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. மற்றும் தொண்டர்களை காவல்துறை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அந்த வாகனத்தை தொண்டர்கள் தாக்கினர். அதன் பின்னர் வேறு வாகனத்தில் அன்புமணி அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் கூட்டத்தில் இருந்த சிலர் காவல்துறை மீது கற்களை வீசினர். இதனால் ஆங்காங்கே கற்களாக காட்சி அளித்தது. அதேபோல் தண்ணீர் பாட்டில், கைகளில் வைத்திருந்த கொடிக்கம்பம் ஆகியவற்றை காவல்துறையை நோக்கி வீசினர். இதில் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் காயம் அடைந்தனர். தடியடியில் பா.ம.க. தொண்டர்கள் சிலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.