மணிப்பூர் சென்ற இந்திய கூட்டணி கட்சி எம்பிக்கள்: பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் ஆய்வு
Share
கலவரம் பாதித்துள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு, எதிர்கட்சிகளின் இந்திய கூட்டணியின் 20 எம்பிக்கள் அடங்கிய குழுவினர் நேரில் சென்று ஆய்வை தொடங்கியுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும், மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையில் வெடித்த வன்முறை காரணமாக 140க்கும் அதிகமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
54,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடங்களில் வெளியானது. இந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒட்டுமொத்த தேசத்தையும் நிலைகுலைய செய்தது. மணிப்பூரில் அரங்கேறிவரும் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறைகள் குறித்தும், அமைதி நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த சூழலில் காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 20 எம்பிகள் டில்லியில் இருந்து மணிப்பூருக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டனர். காலை டில்லியில் இருந்து புறப்பட்ட எம்பிகள் குழு, இம்பால் சென்றடைந்தது.
இரண்டு குழுக்களாக பிரிந்து செல்லும் எம்பிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்தனர். மேலும் இந்த குழுவினர் இன்று மணிப்பூர் ஆளுநரை நேரில் சந்திக்க இருக்கின்றனர். இதற்கிடையே, மணிப்பூரில் மகளிர் பாலியல் வன்கொடுமை கானொலி தொடர்பாக மத்திய புலனாய்வு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய புலனாய்வு விசாரணை மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்ததையடுத்து, மத்திய புலனாய்வு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.













