LOADING

Type to search

சினிமா

“உயர உயர பறந்தாலும் காக்கா பருந்தாக முடியாது” – சூப்பர் ஸ்டார் பட்டமும், ரஜினி சொன்ன குட்டிக்கதையும்!

Share

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து குட்டிக்கதை ஒன்றை சொன்னார்.

ரஜினிகாந்த் பேசுகையில், “எனக்கு 1977இல் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு. அப்போது இருந்து எனக்கு பிரச்னை தான். அந்த பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். உடனே ரஜினிகாந்த் பயந்து விட்டார் என்று கூறினார்கள். நான் பயப்படுவது இரண்டே இரண்டு பேருக்கு தான் ஒன்று கடவுள் இன்னொன்று நல்ல மனிதர்கள்.

அப்போது இருந்த காலகட்டத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார். கமல் உச்சத்தில் இருந்தார். அவர்கள் இருக்கும்போது எனக்கு அந்த பட்டம் வேண்டாம் என்று நினைத்தேன். மேலும் துறையில் வயிற்றெரிச்சல் நிறைய இருக்கும். இப்போது உள்ள 2K கிட்ஸ் நான் பட்ட கஷ்டங்கள் தெரியாது. ஏனென்றால், தற்போது இருப்பதுபோல் அப்போது இல்லை. இருந்திருந்தால் நான் பட்ட கஷ்டங்கள் தெரிந்திருக்கும்.

விலங்குகளில் சேட்டையானது குரங்கு. பறவைகளில் சேட்டையானது காகம். காகம் ஒரு இடத்தில் இருக்காது அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கும் பறந்து கொண்டிருக்கும். ஆனால், பருந்து மிக உயர பறந்து கொண்டிருக்கும். காகம் தனது சிறகடித்து கழுகை நோக்கி பறந்து சென்று அதனை கொத்தும். ஆனால் பறந்து காகத்தை ஒன்றும் செய்யாது இன்னும் கொஞ்சம் மேலே பறந்து விடும். காகம் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும். ஆனால், முடியாது கீழே விழுந்து விடும்.

எனவே, நம்மை யாராவது எதிர்த்தால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் உழைத்து முன்னேறி போய் கொண்டே இருக்க வேண்டும். உடனே சமூக ஊடகங்களில் ரஜினிகாந்த் அவரை காகமாக சொன்னார் இவரை பருந்தாக சொன்னார் என்று ஏதாவது எழுதுவார்கள். குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை. ஆகமொத்தத்தில் இந்த ரெண்டும் சொல்லாத ஊருமில்லை. எனவே, நாம் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு போயிக்கிட்டே இருப்போம்” என்று பேசினார்.