LOADING

Type to search

இந்திய அரசியல்

செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது

Share

செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்று கூறி, அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமலாக்க துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார் அப்போது அவர் கூறியதாவது: செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார், இடையூறுகளை விளைவித்தார். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்ததால் அவர் அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. எனவே உச்சநீதிமன்றம் அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலங்களை பெற முயற்சித்தோம், ஆனால், அவர் எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்க துறைக்கு இருக்கும் உரிமை, அதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் விசாரணை பாதிக்கப்படும். கைதுக்கான காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டோம். அமலாக்க துறை விசாரணை ஏன் தேவைப்படுகிறது? என்பதற்கான காரணங்களையும் விளக்கி விட்டோம். தான் தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினாலும் உடலில் எந்த காயங்களையும் அவர் நீதிபதியிடம் காட்டவில்லை” என்று வாதங்களை அடுக்கினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.