டெல்டா மாவட்ட காவேரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
Share
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம். ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில் உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த விழா காவேரி ஆறு பாயும் பகுதிகளில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவேரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவேரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவேரிக்கு படையிலிட்டு வழிபடுவர். அதன்படி இன்று ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட காவேரி டெல்டா மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பெரிய கோவில் புது ஆற்றுப் படித்துறை, வடவாற்று படித்துறை, வெண்ணாற்றுப் படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, சுவாமிமலை காவேரி படித்துறை, கும்பகோணம் பாலக்கரை காவேரி படித்துறை, மகாமகக்குளம் உள்பட பல்வேறு காவேரி ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. திருவையாறு காவேரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு காலை முதலே பெண்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.
படித்துறையில் ஏராளமான பெண்கள் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், மலர், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர். தொடர்ந்து மாவிளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைபொருட்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன் மஞ்சள் பிள்ளையாருக்கும், காவேரி தாய்க்கும் தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து திருமணத்தின்போது தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை பைகளில் பத்திரமாக கொண்டு வந்து அவற்றை காவேரி ஆற்றில் புதுமண தம்பதியினர் விட்டு வழிப்பட்டனர்.













