இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு; கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்
Share
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. திமுக எம்.பியான கனிமொழி எழுப்பியக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அளித்த பதிலில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை திமுக குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, குன்வர் டேனிஷ் அலி, அரவிந்த் கண்பத் சவந்த் ஆகியோர் எழுப்பியிருந்தனர்.
இந்த எம்.பிக்களின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) ‘இந்தியாவில் குற்றங்கள்’ என்ற வெளியீட்டில் குற்றங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.
காணாமல் போன பெண்கள், காணாமல் போன சிறுமிகள், மீட்கப்பட்டவர்கள், இன்னமும் மீட்கப்படாதவர்கள் குறித்தான மாநிலம் தழுவிய விவரங்கள் 2016-ஆம் ஆண்டு முதல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன சிறுமிகள் (18 வயதுக்கு குறைந்தோர்) எண்ணிக்கை 2017இல் 75, 2018 இல் 90, 2019 இல் 88, 2020 இல் 112, 2021 இல் 144 என அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 2017இல் 191, 2018 ஆம் ஆண்டில் 195, 2019இல் 167, 2020 ஆம் ஆண்டில் 224, மேலும் 2021 ஆம் ஆண்டில் 369 என அதிகரித்திருக்கிறது.
போலீஸ் மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையில் மாநில அரசுகளின் பொறுப்பில் வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புலனாய்வு மற்றும் வழக்கு நடத்துவதும் மாநில அரசுகளின் பணியாக இருக்கிறது.
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுமைக்கும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களுக்கான அவசரகால உதவிப் பொறிமுறையின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்ற எண்112 அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான அவசர நிலைகளில் இருந்தும் பெண்களுக்கு உதவி செய்வதற்கான கணினி அடிப்படையில் இந்த பொறிமுறை நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.













