ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டினார்
Share
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னிலையில் இன்று (ஆக 5) அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மீன்வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், இந்திய தொல்லியல் துறை பொது இயக்குநர் (டெல்லி) டாக்டர் கிஷோர் குமார் பாசா, துணை பொது இயக்குநர் டாக்டர் எஸ்,கே.மஞ்சுள், இயக்குநர் டாக்டர் அருண்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, ஆதிச்சநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பார்வதி சங்கர்கணேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ராமஜெயம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நாகரிகங்களில் 3 முதல் 4 கால கட்டங்களில் ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இங்குள்ள மக்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி வணிகம் செய்துள்ளார்கள். இப்பகுதியில் உள்ள பறம்பு இரும்புக்காலத்தை சேர்ந்தது என்கிறார்கள். இங்கு இறந்தவர்களை தாழிகளில் இட்டு ஈமச்சடங்கு செய்து புதைத்துள்ளனர். மேலும், எகிப்து பிரமிடுகளில் உள்ளதுபோது இறந்தவர்களின் உடலை மூலிகைகளினால் பதப்படுத்தி வாழ்ந்தபோது பயன்படுத்திய நகைகள், ஆடைகள், உணவு ஆகியவற்றையும் சேர்த்து புதைத்துள்ளனர்.
அலெக்ஸாண்டர் ரியோ 1890ம் ஆண்டுகளிலேயே இங்கு அகழ்வாராய்ச்சி செய்துள்ளார். அதன்பிறகு சுமார் 100 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறையின் மூலம் அகழ்வாராய்ச்சி செய்யப்படுகிறது. நாம் தற்போது பொது யுகம் 2000 வருடங்களுக்கு பின் உள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். பொது யுகம் தொடங்குவதற்கு முன்பு 270 வருடங்கள் பழமையான பொருட்கள், 470 வருடங்கள் பழமையான பொருட்கள் கூட இங்கு கிடைத்துள்ளன.
அதைத்தவிர, நெல் உமி, சிறு தானியங்களும் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் 657 பொது யுகத்துக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3400 வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் நெல், திணை உள்ளிட்ட தானியங்களை உபயோகித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்படும் என்று 2021ம் ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆதிச்சநல்லூர் முன்னணியில் இருக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாகும். இப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து பொருட்களை கண்டறியவும், அதேபோல் அலெக்ஸாண்டர் ரியோ காலத்தில் கண்டறியப்பட்ட பொருட்களையும் சேர்த்து அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களிலேயே பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் அருங்காட்சியகம் அமைக்க இந்திய தொல்லியல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இங்கிருந்து 5000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் எல்லாம் நெதர்லாந்து வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அந்த பொருட்களை எல்லாம் மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு இந்திய அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய பல தலைமுறையினர் நமது மூதாதையர்கள் இப்படிதான் வாழ்ந்தார்கள் என்று அறிந்து கொள்ளும் வகையில் பழங்கால பொருட்கள் கிடைத்த இடத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு மத்திய அரசு போதிய நிதியை எந்தவித தடையுமின்றி வழங்கவுள்ளது. இங்கு அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பழங்கால பொருட்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல்பூர்வமாக அமைக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள் அறியும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணாடிக்குள் வைக்கப்படும் பொருட்களில் கியூ ஆர் கோடு பொறிக்கப்பட்டு கண்ணாடிக்கு மேலேயே பொதுமக்கள் தங்களது அலைபேசியை வைத்து ஸ்கேன் செய்தால், அந்த பொருள் பற்றி ஒலி வடிவில் அவர்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
பழமையான சமுதாயங்கள் வாழ்ந்த திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் இந்திய தொல்லியல் துறை மூலம் அழகான அகழ்வாராய்ச்சி இடம் கிடைத்துள்ளது. இப்பகுதி வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக நபர்கள் இந்த அகழ்வாராய்ச்சி இடத்தினை பார்க்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
ஆதிச்சநல்லூர் பகுதியில் உள்ள 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளன. அவற்றை மீண்டும் இங்கு கொண்டுவருவதற்கு இந்திய தொல்லியல் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நமது கலாச்சாரத்தை காப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பாரத பிரதமர் எனக்கு ஆலோசனைகள் வழங்குவார். கலாச்சார இடங்களை பாதுகாக்க தனியார் துறையினர் பங்களிப்பு செய்யலாம். ஆதிச்சநல்லூர் பகுதியிலும் தனியார் துறையினர் தங்களது பங்களிப்பை வழங்கலாம்.
வெள்ளையர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணிய பாரதியார் போன்ற எண்ணற்ற தலைவர்கள் மகாத்மா காந்தியோடு இணைந்து போராடியுள்ளனர். தற்போது ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் விடுதலை பெற்றாலும் நமது மனதில் பதித்துச் சென்ற சில எண்ணங்களை கைவிட வேண்டும், நமது கலாச்சாரத்தை பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த இடம், வளர்ந்த இடம் மற்றும் அவர் எங்கெங்கே இருந்தாரோ அந்த 5 இடங்களில் மத்திய அரசு நினைவுச்சின்னம், நூலகம் போன்றவற்றை அமைத்துள்ளது. இலண்டனில் அம்பேத்கர் படித்த இடத்தினையும் மத்திய அரசு வாங்கி அங்கு நினைவுச்சின்னம் அமைத்து அவரை பெருமைப்படுத்தியுள்ளது.
உலக அளவில் பெருமையாக இருக்கக்கூடிய இந்திய தொல்லியல் துறையினர் இன்று ஆதிச்சநல்லூரில் பலவிதமான முயற்சிகளுடன் அருங்காட்சியகம் கட்டவுள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.













