ஆன்மிகத்தையும், திராவிடத்தையும் எப்போதும் பிரிக்கவே முடியாது – அமைச்சர் எ.வ.வேலு
Share
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மத்திய அரசிடம் இருந்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தான் மீட்கப்பட்டது. எனவே திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் டாக்டர் மீனாட்சி சுந்தரம், ராஜா ராம், கோமதி குணசேகரன், பெருமாள் ஆகியோர் அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார் விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது, 2006-ம் ஆண்டு நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அறங்காவலர் குழு அமைக்கப்பட்டு சிறப்பாக 5 ஆண்டுகள் பணியாற்றினார்கள். அதைத்தொடர்ந்து மீண்டும் அண்ணாமலையார் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிப்பதற்கு இந்த அரசுக்கு வாய்ப்பு கிடைத்து புதிய அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது நடந்து கொண்டிருக்கிற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் ஒரு நாளும் பிரிக்க முடியாது. .மத்தியில் பாஜக ஆட்சி செய்த போது அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறை கையகப்படுத்தி நடவடிக்கை எடுத்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி,” எனக்கு சாமி நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனவே அண்ணாமலையார் கோவிலை மீட்டுத் தருவேன்” என்று சொன்னார். அதன்படி என்னை பலமுறை டில்லிக்கு அனுப்பி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேசி இந்த திருக்கோவிலை அவர் மீட்டு தந்தார். எனவே இந்த ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல. மேற்கண்டவாறு பேசினார்













