குமரி மாவட்டத்தில் புலி நடமாட்டம்; கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை முயற்சி
Share
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பத்துகாணி பகுதியில் இரவில் நடமாடும் புலி மக்களை தாக்கும் அபாயம் உள்ளதால் அந்த பகுதியில் காவலை தீவிரப்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் அங்கு புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் புலி ஒன்று வீட்டு விலங்குகளை கொன்று அட்டகாசம் செய்து வருகிறது. ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளை கடித்துக் கொன்றதோடு கடந்த 30ம் தேதி கோதையாறு அருகே மோதிரமலையில் ரப்பர் பால் வடிக்க சென்ற சிவகுமார் என்பவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி பத்துகாணி பகுதிக்குள் புகுந்த புலி அங்கு ஆட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை கடித்து குதறியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை வைத்தனர். இந்த நிலையில் ஏற்கனவே சிற்றாறு பகுதியில் ஆய்வு நடத்தி வரும் எலைட் குழுவினர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பத்துகாணி பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இது தவிர புலி நடமாட்டம் குறித்து நன்கு அறிந்த பழங்குடியினர் 4 பேர் கொண்ட டைகர் ட்ராக்கர் குழுவினரும் களத்தில் இறங்கி உள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிப்பது அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என்று நிலைமைக்கு ஏற்ப 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மருதம் பாறை பகுதியில் புலியை பிடிக்க ஏற்கனவே கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சின்னமலை பகுதியில் புலியைப் பிடிக்க புதிதாக குண்டு வைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் இருந்து மேலும் 2 கூண்டுகள் கொண்டு வரப்பட்டு புலி அதிகம் நடமாடும் பகுதியில் வைக்கப்பட உள்ளதாகவும் கூறினர். இது குறித்து வனச்சரகர் முகைதீன் கூறியதாவது:
பத்துகாணி பகுதியில் நடமாடும் புலி ஏற்கனவே மனிதரை தாக்கி இருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி கவலை கொள்ளாமல் அந்த பகுதி மக்கள் நள்ளிரவில் கூட வெளியே சுற்றி திரிகின்றனர். அவர்களை புலி தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரங்களில் மக்கள் வெளியே வரக்கூடாது. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே புலியை பிடிக்க முடியும். இரவில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், புலியை கண்காணிக்கவும், பத்துகாணி பகுதியில் காவலை தீவிரப் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.













