உ.பி. பள்ளி ஆசிரியையின் மத துவேஷ பேச்சு: வழக்குப் பதிய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
Share
உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர் ஒருவரை மத ரீதியாக விமர்சித்ததோடு, சக மாணவர்ளை ஏவி கன்னத்தில் அறையச் செய்த பள்ளி ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முஸாபர்நகர் காவல் கண்காணிப்பாளருக்து (எஸ்எஸ்பி) இவ்வாறு உத்தரவிட்டுள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு வார காலத்துக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, இச்சம்பவம் தொடர்பாக, ஆர்இடி சட்டம் 2019, பிரிவு 17-ன் (குழந்தைகளை உடல் ரீதியாக தண்டித்தல் / மனரீதியாக துன்புறுத்துதல்) கீழ் நடவடிக்கை எடுக்க முஸாபர்நகர் மாவட்ட நீதிபதியை வலியுறுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியை மாணவர் ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சக வகுப்புத் தோழர்களை ஏவி அடிக்கச் செய்த வீடியோ ஒன்று இணைத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் த்ரபதி தியாகி என்ற ஆசிரியர் 2-ஆம் வகுப்பு சிறுவனிடம் வாய்ப்பாடு சொல்லும்படி சொல்கிறார். அந்தச் சிறுவனால் அதனை சரியாகச் சொல்ல முடியவில்லை. உடனே சக மாணவர்களை எழுப்பி அந்தச் சிறுவனை கன்னத்தில் அறையச் சொல்கிறார். அந்தச் சிறுவன் அழும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினை (முஸ்லிம்) சுட்டிக்காட்டி, அந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்ததால்தான் இதுபோன்ற அந்தச் சமூக சிறார்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாகக் கூறி, அந்தச் சிறுவனை இன்னும் பலமாகத் தாக்கும்படி கூறுகிறார்.
தற்போது இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராகுல் கண்டனம்
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “அப்பாவிக் குழந்தைகளின் மனதில் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைப்பது, அதுவும் பள்ளி எனும் புனிதமான இடத்தை வெறுப்பை வர்த்தகம் செய்யும் சந்தையாக மாற்றுவது என்பது ஓர் ஆசிரியர் செய்யக்கூடாதது என்று கூறியுள்ளார்.













