LOADING

Type to search

இந்திய அரசியல்

‘என் தலையை வெட்டச் சொன்ன அயோத்தி சாமியாருக்கு ரூ. 500 கோடி சொத்து எங்கிருந்து வந்தது?’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Share

தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1600 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் தென்காசி மாவட்ட இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் இன்று (செப் 5)  நடைபெற்றது.  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தெற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினர்.

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு,  திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் திமுக அரசு மீது மக்கள் அளவில்லா மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். திமுகவின் செல்வாக்கு உயர்வதை கண்டு எதிர்க் கட்சியினர் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியாவது பொய் செய்தியை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க., செயல்படுகிறது.

என்னைப்பற்றித் தான் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. நான் சனாதன கொள்கையைத்தான் ஒழிக்க வேண்டும் என நான் பேசினேன். ஆனால் இதனை பாஜகவினர் தவறாக பிரசாரம் செய்து வருகின்றனர். அயோத்தியைச் சேர்ந்த சாமியார் எனது தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ.10 கோடி தருவதாக கூறியுள்ளார். என் தலையை சீவ 10 ரூபாய் சீப்பு தந்தால் நானே சீவி கொள்வேன். சாமியாருக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கேட்ட போது, அவர் தனக்கு ரூ.500 கோடி சொத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த சாமியாருக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது.

கலைஞர் கொள்கை வாரிசு, பெரியார் கொள்கை வாரிசு, அண்ணா கொள்கை வாரிசு நான்தான். மணிப்பூர் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன படுகொலை செய்தது பா.ஜ.க.,தான். மணிப்பூர் 5 மாதங்களாக பற்றி எறிகிறது. அங்கு இரண்டு பெண்களை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்திருப்பீர்கள். மணிப்பூரைச் சேர்ந்த 18 விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடலுக்கும் ஆரிய மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.

கலைஞருக்கும் திமுக தொண்டர்களுக்கும் உள்ள உறவு. 1976ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் கலைஞரை தனிமைப் படுத்த முயன்றனர். தொண்டர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. திருப்பதி, திருத்தணிக்கு செல்வதாக கூறி அங்கு மொட்டை போட்டுவிட்டு மெரினாவிற்கு வந்து கலைஞரை வாழ்த்தியவர்கள்தான் திமுக தொண்டர்கள்.

மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. நீங்கள் இல்லாமல் கட்சியும் கிடையாது. ஆட்சியும் கிடையாது. உங்களை பார்த்து பெருமையாகவும் இருக்கிறது. பொறாமையாகவும் இருக்கிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் நான் அவர்களை பார்த்ததில்லை. அதனால்தான் உங்களை பார்த்து நான் பொறாமைப்  படுகிறேன். அறிஞர் அண்ணா, பெரியார் மறு உருவமாக நான் உங்களை பார்க்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் வெண்கல சிங்கம் சிலையை அமைச்சர் உதயநிதிக்கு நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.