முகப்பேரில் அ.ம.மு.க. பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
Share
முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது48). அப்பகுதியில் மீன் கடை வைத்துள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக இருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு ஜெகன் மீன்கடையில் இருந்தார். அப்போது 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மீன்கடைக்குள் புகுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகன் அவர்களிடம் இருந்து தப்பிக்க கடையில் இருந்து சாலையில் தப்பி ஓடினார்.
ஆனாலும் அவரை விரட்டிசென்ற கும்பல் ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலையாளிகள் எந்த வித பதட்டமும் இல்லாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொலை நடந்த இடம் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நொளம்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் காவல்துறை விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஜெகன், முகப்பேர் பகுதியில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பு ஒன்றில் தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கியிருந்தபடி மீன்கடை நடத்தி வந்தார். இதனை அறிந்த ஏற்கனவே கொலையுண்ட ராஜேஷின் கூட்டாளிகள் பழிக்கு பழியாக ஜெகனை தீர்த்து கட்டி இருப்பது காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எனினும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகின்றனர். அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் முகப்பேர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













