இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் எஸ்ஜே சூர்யா
Share
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தில் இடம்பெறும் நடிகர் கமல்ஹாசனின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன.
தற்போது சித்தார்த் உள்ளிட்டவர்களின் காட்சிகளை மட்டும் ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இயக்குநர்களாக உருவெடுத்த சிம்பு தேவன், அறிவழகன், வசந்தன் பாலன் உள்ளிட்டோர் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சித்தார்த் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகின்றன. இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கும் இந்த படம் வெளியீட்டுக்கு முன்பே இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு ஆகியோரை சிஜி மற்றும் அவர்களைப் போலவே உருவம் கொண்டவர்களை வைத்து அவர்களது கதாப்பாத்திரத்துக்கு இயக்குநர் ஷங்கர் உயிர்கொடுத்துள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் நடித்து இருப்பதை உறுதி செய்து இருக்கிறார். இதனால் அவர் தான் கமலுக்கு வில்லனாக இந்தியன் 2ல் நடிக்கிறார் என தற்போது உறுதியாகி இருக்கிறது.













