பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா – ஸ்டாலின் கேள்வி
Share
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துகளைத் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்டோர்– பட்டியலினத்தவர்– பழங்குடியினர்– பெண்ணினத்திற்கு எதிரான ‘சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்’ என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும்– மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத் தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம- மனுவாத- சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர். அந்த மரபின் நீட்சியாக, சாதியின் பெயராலும் சாஸ்திரங்களின் பெயராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை, பெண்களின் சமத்துவ வேட்கையை மறுத்து- சுரண்டலை நியாயப்படுத்துவதற்கு எதிரான கருத்தியல் ரீதியான வாதங்கள் இந்திய தேசத்தின் பல முனைகளில் இருந்தும் தொடர்ந்து ஒலிப்பதை சமூகவியல் ஆய்வாளர்கள் அறிவார்கள். நிலவுக்குச் சந்திராயன் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துகளைச் சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்தப் பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள். குழந்தைத் திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார். குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார். ‘நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன்தான்’ என்றும், அந்த எண்ணங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார்.
பெண்களை இழிவுபடுத்தியும், அவர்கள் வேலைக்குப் போகக்கூடாது என்றும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், மறுமணத்துக்கு மந்திரமே கிடையாது என்றும் இன்னமும் சிலர் ஆன்மீக மேடைகளில் பேசி வருகிறார்கள். சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை ‘சனாதனம்’ என்ற சொல்லை வைத்துத்தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்று சொன்னார். அமைச்சரின் தலைக்கு விலை வைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால், அவர் மீது உத்தர பிரதேச மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா? வழக்கு போட்டதா? மாறாக, உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், ‘சனாதனத்தைப் பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு செய்தி வந்தால், அது உண்மையா- பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா? இந்தியாவிலேயே முதலில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்து, சனாதனம் மறுத்ததை சாத்தியம் ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழகம்.
எந்தத் தனிமனிதர் உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக ஆக்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இனம், மொழி, சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒருதாய் மக்களாக வாழும் அமைதிமிகு வாழ்க்கையை உறுதிசெய்து வரும் இயக்கம். கொள்கையை அறிவுப்பிரச்சாரம் செய்தவர்களே தவிர, எந்தக் காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம். அத்தகைய பழம்பெரும் பேரியக்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால் அந்தப் புதைகுழியில், பா.ஜ.க.தான் மூழ்கும்! இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டள்ளார்.













