7 தொகுதி இடைத்தேர்தல்: “இந்தியா” கூட்டணி” 4 இடங்களை வென்றது; உத்தரபிரதேசத்தில் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பாஜகவை சமாஜ்வாடி தோற்கடித்தது
Share
ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று (செப்8)வாக்குகள் எண்ணப்பட்டதில், 4 இடங்களை இந்தியா கூட்டணி வென்றது. உத்தரபிரதேசத்தில் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பாஜகவை சமாஜ்வாடி தோற்கடித்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுப்பள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்பூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 5&ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த 7 தொகுதிகளிலும் இன்று (செப் 8) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த ஏழு தொகுதிகளில் “இந்தியா கூட்டணி” 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 3 இடங்களைப் பெற்றது.
கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகனுமான சாண்டி உம்மன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு பா.ஜ.க டெபாசிட்டை இழந்தது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோசி தொகுதியில் சமாஜ்வாடி அமோக வெற்றி பெற்றது.
மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது.
ஜார்க்கண்டில் ஆளும் ஜே.எம்.எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி) வேட்பாளர் பேபி தேவி 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளர் யசோதா தேவியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
திரிபுராவில் போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளிலும் பா.ஜ.க. வென்றது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பகேஷ்வர் தொகுதியிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.
விரைவில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணிக்கு இது பரிசோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இடைத்தேர்தல் நடைபெற்ற ஏழு தொகுதிகளில் 4 தொகுதிகளில் “இந்தியா” கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் உத்தரபிரதேசத்தில் அடைந்த வெற்றியும், மேற்கு வங்கத்தில் பாஜக வசம் இருந்த தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் முழுவிவரம் வருமாறு:
ஜார்கண்ட்
ஜார்கண்டில் தும்ரி தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் பேபி தேவி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) வெற்றி பெற்றார்.
பேபி தேவி 1,00,317
யசோதா தேவி (ஏஜேஎஸ்யூ&பாஜக அணி) 83,167
(வித்தியாசம் 17,153)
கேரளம்
கேரளாவில் முன்னாள் முதல்&மந்திரி உம்மன்சாண்டி மரணத்தால் புதுப்பள்ளியில் நடந்த இடைத்தேர்தலில் அவருடைய மகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சாண்டி உம்மன் (காங்) 80,144
தாமஸ் (மார்க்சிஸ்ட்) 42,425
லிஜின்லால் (பாஜக) 6558
(வித்தியாசம் 37,719)
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி எம்எல்ஏ தாராசிங் சவுகான் கட்சி மாறி பாஜக தாவியதால் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் கட்சி தாவிய சவுகான் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை சமாஜ்வாடி தோற்கடித்து, 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுதாகர்சிங் (சமாஜ்வாடி) 1,24,427
தாராசிங் சவுகான் (பாஜக) 81,668
(வித்தியாசம் 42,759).
மேற்கு வங்காளம்
மேற்குவங்காளத்தில் துப்குரி தொகுதியை பாஜகவிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது.
நிர்மல்சந்திர ராய் (திரிணாமுல் காங்) 97,613
தபசிராய் (பாஜக) 93,304
ஈஸ்வர் சந்திர ராய் (மார்க்சிஸ்ட்) 13,758
(வெற்றி வித்தியாசம் 4309)
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாகேஸ்வர் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது.
பார்வதிதாஸ் (பாஜக) 33,247
பசந்த்குமார் (காங்) 30,842
(வித்தியாசம் 2405).
திரிபுரா
திரிபுராவில் பாக்சாநகர், தன்பூர் ஆகிய 2 தொகுதிகளிலும் பாஜக வென்றது.
பாக்சாநகர்:
தபாசல் ஹொசைன் (பாஜக) 34,146
மிசான் ஹொசைன் (மார்க்சிஸ்ட்) 3909
(வித்தியாசம் 30,237).
தன்பூர்:
பிந்து தேப்நாத் (பாஜக) 30,017
கவுசிக் சந்தா (மார்க்சிஸ்ட்) 11,146
(வித்தியாசம் 18,871).













