விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் – 12ம் தேதி நேரில் ஆஜராகிறார் சீமான்?
Share
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 12ம் தேதி ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு, காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். அதன்பேரில், காலை 10:30 மணி அளவில் அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமான் 12ஆம் தேதி ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.













