பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாதென கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்
Share
பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாதென கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது.
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டே கொண்டு வந்த தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவிடாமல், மாநிலங்களின் குறிப்பாக தென் மாநிலங்களின் உரிமையைப் பறித்து, குரலற்றவர்களாக்கும் சூழ்ச்சி வியூகம் அமைத்ததைத் தோற்கடித்தப் பெருமை திமுகவின் வரலாற்றுப் பெருமையாகி, இந்தியா முழுவதும் பரவி, வரலாறு படைத்தது. எனவே, முந்தைய சட்டமன்றத் தீர்மானம், தொகுதி மறுவரையறை பற்றி 25 ஆண்டுகளுக்கு தற்போதைய முறையே தொடரும் என்பதில் உறுதியுடன் இருக்கவேண்டும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா எல்லாம் என்ன நிலைப்பாடோ அதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும். தென்மாநிலங்களை பாதிக்கும் வகையில், எந்த முயற்சிக்கும் இடம் தரக்கூடாது. இந்திய அளவில் நமது குரல் நசுக்கப்படக் கூடாது. அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பாஜக பொறியில் திமுக சிக்கிவிட்டால், அது திமுகவை வீழ்த்திடத் துடிக்கும் இன, அரசியல் எதிரிகளுக்குச் சரியான வாய்ப்புத் தந்ததாக ஆகிவிடக் கூடும். தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலையில், வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழியை உடைத்தது போல் ஆகிவிடும் என்ற பெருங்கவலையால், இதனை அவசர வேண்டுகோளாக, உரிமை விழைவாக திமுகவுக்கு விடுக்கிறோம். உறவோடும், உரிமையோடும் இதனைச் சுட்டுவது நமது கசப்பான கடமையாகும். சிந்திக்கவும், சிந்திக்கவும். சறுக்கல் பெரிய விபத்தாகிவிடக் கூடும் என்பதே நமது கவலை!” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்













