ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படம்
Share
ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படம். சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். தருண் தேஜா எழுதி இயக்குகிறார். நடிகையாக மட்டுமின்றி, பாடகியாகவும் இசைக் கலைஞராகவும் பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர், தனித்துவமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை எழுதி இயக்கும் தருண் தேஜா, ஏற்கெனவே வசந்த் ரவி நடிப்பில் வெளியான ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தை இயக்கியவர். உளவியல் ஹாரர் பின்னணியில் உருவான இப்படம், அதன் மிரட்டலான காட்சியமைப்புகள், ஒலி வடிவமைப்பு மற்றும் வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக, ஹாரர் வகைத் திரைப்படங்களில் தனது தனித்துவமான இயக்க அணுகுமுறையை வெளிப்படுத்திய தருண் தேஜா, தற்போது ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்குகிறார்.













