LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் யப்பானிய மொழியை கற்பிக்க முன்னெடுப்புகள் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு

Share

நடராசா லோகதயாளன்

யப்பானில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிற்கு இலவசமாக யப்பான் மொழி கற்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் சமுர்த்திப் பணிப்பாளர்
சத்தியசோதி தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் சமுர்த்திப் பணிப்பாளர் சத்தியசோதி மேலும் விபரம் தெரிவிக்கையில்:

”இந்த ஏற்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவிலும் தலா ஒரு நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து நிலையங்களிலும் 50 மாணவர்கள் என்ற அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

யப்பான் மொழியைக் கற்க விரும்புவர்கள் சமுர்த்தி பயணாளிகள் குடும்பமாகவோ அல்லது குறைந்த வறுமானம் பெறும் குடும்பமாகவோ இருக்கலாம். இக் கற்கை நெறியானது ஒரு வருடகாலத்திற்குள் 300 மணித்தியாலங்களைக் கொண்டதாக அமையும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும். க.பொ.த சாதாரணம் மற்றும் உயர்தரம் கற்றவர்களாகவும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

இக்கற்கைநெறியை பூர்த்தி செயபவர்கள் யப்பானில் விவசாயம், முதியோர் பராமரிப்பு, உணவு பரிமாறல் போன்ற பணகளில் காணப்படும் வெற்றிடங்களிற்கு உடன் பயணிக்க முடியும்.

இதேநேரம் யப்பன் மொழியை கற்கவோ அல்லது யப்பான் நாட்டிற்கு பயணிக்கவோ விரும்பும் எந்தவொரு இளைஞர், யுவதிகள் உடம்பின் எந்தவொரு பாகத்திலும் பச்சை குத்தியிருந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனவும் தெரிவித்தார்.