LOADING

Type to search

இந்திய அரசியல்

“புதிய குற்றவியல் சட்டங்கள் நீதித்துறையில் மாற்றத்தை கொண்டு வரும்” – தலைமை நீதிபதி சந்திரசூட்!

Share

புதிய குற்றவியல் சட்டங்கள் நீதி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

     இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த டிசம்பர் 21-ம் தேதி தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது. இந்த புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், புதிதாக இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இந்தியாவின் நீதி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது, “புதிதாக இயற்றப்பட்ட சட்டங்கள், இந்தியாவின் குற்றவியல் நீதி தொடர்பான சட்டங்களின் கட்டமைப்பில் புதிய மாற்றங்களை கொண்டு வரும். குடிமக்களாகிய நாம் அவற்றை ஏற்றுக்கொண்டால் புதிய சட்டங்கள் வெற்றிகரமாக அமையும். பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், குற்ற வழக்கு விசாரணைகளை திறம்பட செயல்படுத்துவதற்கும் மிகவும் தேவையான முன்னேற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தால் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பது, இந்தியா மாறி வருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். மேலும் தற்போதைய சவால்களை சமாளிக்க புதிய சட்டக் கருவிகள் தேவைப்படுகின்றன. தடயவியல் நிபுணர்களின் திறனை வளர்ப்பதில் அதிக முதலீடு செய்ய வேண்டும், விசாரணை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் மற்றும் எங்கள் நீதிமன்ற அமைப்பில் முதலீடு செய்ய வேண்டும். புதிய குற்றவியல் சட்டத்தின் முக்கிய விதிகள், இந்த முதலீடுகள் கூடிய விரைவில் செய்யப்பட்டால் மட்டுமே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்