இன்சுலின் மருந்துகளுடன் திஹார் சிறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்!
Share
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திஹார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் கையில் இன்சுலின் மருந்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2-ம் நிலை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தன்னுடைய குடும்ப மருத்துவருடன் காணொலி மூலம் ஆலோசிக்க அனுமதி கோரி டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்த போது, “சர்க்கரை நோய் இருந்தபோதும் கெஜ்ரிவால் மாம்பழம் உள்ளிட்ட அதிக சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுகிறார். மருத்துவ காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜாமீன் பெறவே அவர் இவ்வாறு செய்கிறார்” என அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திஹார் சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் இன்சுலின் மருந்துகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று வலியுறுத்தி அவருக்கு இன்சுலின் கிடைப்பதை உறுதி செய்யுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட டில்லி அமைச்சர் அதிஷி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300ஐத் தாண்டிவிட்டதாக கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த 20 நாட்களாக அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார். அவர் 30 வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின், சர்க்கரை அளவு 300ஐ தாண்டியிருக்கிறது. உலகில் எந்த மருத்துவரிடம் கேட்டாலும் இன்சுலின் இல்லாமல் 300க்கு மேல் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுவர். ஆனால், பாஜகவின் வழிகாட்டுதலின்படி திஹார் நிர்வாகம் இன்சுலின் வழங்க மறுத்துவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இப்படிப்பட்ட கொடுமை நடக்கவில்லை… சர்க்கரை அளவு 300க்கு மேல் உள்ள சர்க்கரை நோயாளிக்கு இன்சுலின் கொடுக்க மறுக்கின்றனர் என்ன கொடுமை இது” என்றார்.