“கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Share
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. மேலும் வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமான நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாரும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. கோடை வெயிலின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளவு சிறிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கவும் தடையின்றி தண்ணீர் வழங்கவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது.. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 22 மாவட்டங்களுக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.