மோடியின் கடந்தகால தேர்தல் வாக்குறுதிகளை ஒலிபரப்பியில் பிரச்சாரம் செய்த தேஜஸ்வி யாதவ்
Share
பீகார் மாநிலம் மதுபானியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கடந்த காலங்களில் மோடி பேசிய வாக்குறுதிகளை கையடக்க புளூடூத் ஸ்பீக்கரில் ஒலிபரப்பினார். பீகாரில் 2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய குஜராத் முதல்வர் மோடி ஆற்றிய பல உரைகளின் தொகுப்பை தேஜஸ்வி ஒலிபரப்பினார். மோடி பேசும் அந்த ஆடியோவில், “பணவீக்கம் இப்படியே உயர்ந்து கொண்டே போனால் ஏழைகள் என்ன சாப்பிடுவார்கள். இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பணவீக்கம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட தயாராக இல்லை. நாட்டின் தலைவர்கள் ஏழைகளைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க விரும்பினால், உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டருக்கு நமஸ்காரம் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் வீட்டிலிருக்கும் எரிவாயு தோம்புகளை பிரித்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால், பீகாரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ரூ.1.25 லட்சம் கோடி நிதி வழங்குவதாகவும், தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என்று மோடி பேசியுள்ளார்.